Friday, September 30, 2016

தமிழ்க்கல்விப் பளிங்குவெட்டில் மலேசியப் பிரதமர் தமிழில் கையொப்பம்


மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் பளிங்குவெட்டு (Plaque) பொறுத்தப்படவுள்ளது. அந்தச் சிறப்புப் பளிங்குவெட்டில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் தமிழில் கையொப்பம் இட்டுச் சிறப்பித்துள்ளார். பிரதமர் தமிழ்மொழியில் தம் பெயரைக் கையொப்பம் இட்டுள்ள செயலானது 200 ஆண்டு மலேசியத் தமிழ்க்கல்விக்கும் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மாண்புமிகு பிரதமருடன் கல்வித் துணையமைச்சர்



மேலும், பிரதமரைப் போலவே மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மாட்சீர் பின் காலிட்டும் இந்தப் பளிங்குவெட்டில் தமிழ்மொழியில் கையொப்பம் இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரும், கல்வி அமைச்சரும் தமிழில் கையொப்பம் இட்டுள்ளது மலேசியத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மலேசியக் கல்வி அமைச்சரும் கல்வித் துணையமைச்சரும்


மலேசியாவில் 1816ஆம் ஆண்டில் பினாங்கில் ஆங்கிலேயர்கள் தொடங்கிய பினாங்குப் பொதுப் பள்ளியில் (Penang Free School) ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அன்று அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த ரெவரண்ட் அட்சிங்சு என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கினார்.

அப்பொழுது தொடங்கிய தமிழ்க்கல்வி 200 ஆண்டுகளாக மலேசியாவில் நிலைத்து வாழ்கின்றது என்பது வரலாற்றுச் சிறப்புகுரியது. தமிழ்நாட்டுக்கு வெளியே கடல்கடந்த ஒரு நாட்டில் தமிழ்மொழி மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருவதும் கல்விமொழியாக வளர்ந்து வருவதும் பெருமைக்குரிய செய்தி.

மலேசியாவில் ஒரு தனி வகுப்பறையில் தமது வாழ்வைத் தொடங்கிய தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கடந்த பிறகு இன்று 524 தொடக்கப்பள்ளிகளில் பயிலப்படுகிறது. அதுவும் தமிழ்வழிக் கல்வியை வழங்கி வருகின்றது. மலாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து ஏனைய பாடங்களாகிய கணிதம், அறிவியல், நன்னெறி, வரலாறு, உடற்கல்வி, நலக்கல்வி, இசை, கலைக்கல்வி, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. இதன்வழி தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழுக்குக் கல்வி மொழிக்குரிய உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்கள் படிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்விக் கழகம், பல்கலை வரையில் தமிழில் படிப்பதற்கான வாய்ப்பை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

மழலையர் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்மொழியைக் கற்கும் உரிமையும் வாய்ப்பும் மலேசியாவில் இருக்கின்றது என்பது தமிழ்மொழி அடைந்திருக்கும் வெற்றியாகும்.

இவ்வாறு மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் நிறைவை இந்த 2016ஆம் ஆண்டில் அடைகின்றது. இந்த வரலாற்றைப் பெருமைபடுத்தும் வகையில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தை ஒராண்டுக் காலத்திற்குப் பெருவிழாவாகக் கொண்டாட மலேசியக் கல்வி அமைச்சு முன்வந்துள்ளது.
மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர்


இந்தக் கொண்டாட்டப் பெருவிழாவுக்கு மலேசியக் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்கள் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஓராண்டுக் காலத்திற்குத் தமிழ்க்கல்விக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல திட்டங்களையும் நிகழ்சிகளையும் நடத்தவுள்ளனர்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதோடு தமிழ்மொழி நிலைபெற்று வாழவும் இந்த 200 ஆண்டுகள் கொண்டாட்டம் வழிவகுக்கும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்படும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது எல்லாருடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

#தமிழ்க்கல்வி200ஆண்டு
@சுப.நற்குணன்

No comments:

Blog Widget by LinkWithin