Wednesday, May 30, 2012

ஈப்போவில் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு


பேரா மாநிலத்தில் உள்ள சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில், மலேசியாவில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ ஈப்போவில் இன்று 30.5.2012ஆம் தொடங்கியது. 30 - 31 மே 2012 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது.

மலேசியா மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்க்கல்வி, தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பாக ஏறக்குறைய 32 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் படைக்கப்படுகின்றன.

மலேசியாவில் தமிழ்க்கல்வியை முன்படுத்தி முதன் முறையாக நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசியர்கள் ஆகியோர் திரளாக வந்து கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ் ஆசிரியர்களிடையே நல்லதொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருவதை இதன்வழி அறியமுடிகிறது.

முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி
ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் சிக்கலைக் களையவும், தங்கள் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுவதாக இதன் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி தெரிவித்தார்.

தொடக்க நாளான இன்று முதலாவதாக முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் ‘கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை படைத்தார். அவரைத் தொடர்ந்து உப்சி (UPSI) பல்கலைக்கழக விரிவுரைஞர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி ‘ஒவ்வோர் ஆசிரியரும் ஓர் ஆய்வாளர்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்.

இன்றைய நாளில் மட்டும் மூன்று அரங்குகளில் மொத்தம் 15 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகள் அனைத்து நூல்வடிவில் ஆய்வடங்கலாக அனைத்துப் பேராளர்களும் வழங்கப்பட்டுள்ளது.






தமிழ்நாடு, சிங்கப்பூர் பேராளர்கள் படைத்த கட்டுரைகள் பலருடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக அமைந்த தருணத்தில், மலேசியக் கல்வியாளர்களின் கட்டுரைகளும் கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு கூறுகளை அலசி ஆராயும் வகையில் அமைந்திருந்தன.

நமது நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்க்கல்வி வளர்ச்சி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வுகளை நடத்தி சிறப்பாகப் படைத்தளிக்க முடியும் என்பதை இந்த மாநாடு உறுதிபடுத்தியுள்ளது என்றால் மிகையன்று.

கல்வியியல் துறையில் சிகரங்களைத் தொடுவதற்கு நமது ஆசிரியர்கள் தங்கள் கரங்களை நீட்டி மேலெறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த மாநாட்டில் நேரடியாகக் காண முடிந்தது.

இந்த மாநாட்டில் கட்டுரை படைத்த மலேசியக் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ‘திருத்தமிழ்’ மனமார்ந்த பாராட்டையும் நல்வாழ்த்தையும் பதிவுசெய்வதில் மகிழ்ச்சி கொள்கிறது.

விரிவுரைஞர் மன்னர் மன்னன்
திரு.வேல்முருகன் - சிங்கை
திருமதி தனலெட்சுமி
விரிவுரைஞர் திரு.மோகன் குமார்
ஆசிரியர் திரு.வாசுதேவன் இலெட்சுமணன்
 
@சுப.நற்குணன், திருத்தமிழ்
 

2 comments:

Unknown said...

இந்தத் தமிழ்த் தொண்டு எல்லாத் தமிழரகளுக்கும் மிகுந்த பயனைத் தரத்தக்கது. இதனைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் இதயங்கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அறிவியல் முனைவர் வி.மு.பழநியப்பன், கோலாலும்பூர்.

நந்தினி மருதம் said...

பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி

Blog Widget by LinkWithin