Friday, January 08, 2010

மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் வரிவடிவத்தில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்படியாக அறிவிப்பு செய்துள்ளது. மாலை மலர் இணையத்தளத்தில் (7.1.2010) வெளிவந்துள்ள செய்தி இது:-


*************************

சென்னை, ஜன 7
தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

தமிழ் எழுத்துக்களில் எத்தகைய சீர் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிறகு தமிழக அரசு தமிழ் எழுத்து சீர்திருத் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே பல தடவை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. முதலில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்ப மாற்றப்பட்டது.

18-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஜோசப் என்ற அறிஞர் தமிழ் அகராதியை உருவாக்கினார். அது தமிழ் அச்சுக்கலைக்கு உதவியாக இருந்தது. எல்லாரும் அவர் செய்த தமிழ் எழுத்து சீர் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.

1950-களில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் தமிழ் எழுத்துக்களில் ஏராளமான சீர்திருத்தம் செய்தார். இதன் பயனாக தட்டச்சு எந்திரங்களில் தமிழ் எழுத்துக்களை மிக எளிதாக பயன்படுத்த முடிந்தது.

எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். "லை, னை'' எழுத்துக்கள் பழக்கத்துக்கு வந்தன. முதலில் சிறிது எதிர்ப்பு தோன்றினாலும் நாளடைவில் இந்த எழுத்துக்கள் பழகிவிட்டன.

அது போல தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் சிரமத்தை குறைக்க தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கணினிகளில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்த சீர்திருத்தம் இணைய தளங்களில் தமிழ் பயன் பாட்டை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
**********************************

தமிழ் வரிவடிவத்தில் செய்யப்படவுள்ள இந்த எழுத்து மாற்றம் குறித்து திருத்தமிழில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அவை:-

1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)

2.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)

தமிழ் எழுத்துகளில் இப்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதாக பயனளிப்பதாக இல்லை. மாறாக, இந்த மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் புதியதொரு நெருக்கடி ஏற்படப் போவது உண்மை.

இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவம் மிகவும் செம்மையாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதே உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும்.

மேலும், கணினி - இணையம் முதலான தொழில்நுட்பத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளின் பயன்பாட்டுக்கு உரிய நுட்பங்கள் வல்லுநர்களால் செயற்படுத்தப்பட்டுவிட்டன.
இந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.

தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் இருந்த பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், இன்னும் சில சிரமங்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழ் எழுத்துகளை மாற்ற நினைப்பது புதிய வகையிலான பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை எழுத்து மாற்றத்தை, அயலகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால் தமிழின் நிலைமை என்னவாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழர்கள் உலகம் முழுவதும் சிதறி இருந்தாலும் மொழியாலும் தமிழ் எழுத்தாலும் ஒன்றியிருக்கிறார்கள்; தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தமிழ் எழுத்துகளில் செய்யப்படும் மாற்றம் தமிழகத் தமிழர்களையும் அயலகத் தமிழர்களையும் அன்னியப்படுத்திவிடக்கூடும்.

தமிழ்மொழியிலிருந்து பிரிந்து இன்று கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகள் உருவாகி, மொழி வழியாகத் தனித்தனி இனமாகி பிறகு தமிழுக்கும் தமிழருக்கும் பகையாகி இருக்கின்ற பரிதாப நிலைமை போதாதா?

உலகத் தமிழர்களை நாடுவாரியாக சிறுபான்மை இனமாகப் பிரித்துப்போட்டு சிதறடிக்கும் சூழ்நிலை நமக்குத் தேவையா?


உலகத் தமிழர்கள் சிந்திப்பார்களா?

4 comments:

வலைப்பதிவாளர் said...

வணக்கம்.

//இந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.//

முற்றிலும் உண்மை இது ஐயா. எழுத்துச் சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு இன்னும் எத்துணை ஆண்டுகள் இதையே செய்யப் போகிறார்கள்?? இவர்களுக்கு வேறு வேலை இல்லை போலும்.

இணையத்திலும், கணினியிலும் தமிழ் உலக வலம் வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் தீடீரென மாற்றம் செய்வது தமிழுக்கு ஆக்கமா? அல்லது பின்னடைவா என்பதை ஆழ்ந்து சிந்தித்தாக வேண்டும்.

ஒரு சொல்லுக்கு ஒரு வரிவடிவம்(எழுத்து) எனக் கொண்டிருக்கும் சீன மொழி கணினி, கைபேசி, இணையம் என அனைத்து தொழில்நுட்பத்திலும் பீடு நடை போடும் போது 247 ஒலி குறியீடுகளில் அதிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சற்றேளத்தாள 105 எழுத்துக்களைப் பயன்படுத்துவதிலும், கற்பிப்பதிலும், கற்பதிலும் யாருக்கு இப்போழுது என்ன சிரமம் ஏற்பட்டுவிட்டது???

தமிழ்மொழிக்குச் செய்ய வேண்டிய ஆக்கப் பணிகள் ஆயிரம் இருக்க, எழுத்துச் சீர்த்திருத்த குருட்டுவேலையைச் செய்யாதிருப்பது தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெரும் நன்மை.

நன்றி.

மு.மதிவாணன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மதிவாணன்,

உங்கள் வருகைக்கும் சிந்தனைக்கு உரிய கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழுக்கு நலம் செய்வதாகப் போலிப் பரப்புரைகளின் வழியாக வரலாற்றில் தங்கள் பெயர் பதியவேண்டும் என்பதில் சிலருக்கு இருக்கும் பேராசையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.

Tamilvanan said...

இக்கால‌த்தில் ப‌லர் சீர்திருத்தங்க‌ள் ம‌ற்றும் மாற்ற‌ங்க‌ள் செய்வ‌தே வியாபார‌ நோக்க‌த்திற்க்காக‌த்தான். மாற்ற‌ங்க‌ளை த‌டுக்க‌ முடியாது. ஒன்றின் வ‌ள‌ர்ச்சியை அத‌ன் மாற்ற‌ங்க‌ளை வைத்துத் தான் க‌ணிக்க‌ முடியும்.த‌குந்த‌ ஆராய்ச்சிக்கு பின் செய்ய‌ப் ப‌டும் மாற்ற‌ங்களை ஏற்றுக் கொள்ளலாம்.

-/சுடலை மாடன்/- said...

அன்பின் இளங்கோவன்,

கட்டுரைக்கு நன்றி. திரு. பெரியண்ணன் சந்திரசேகர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைக்கும் சுட்டி கொடுங்கள்..

http://perichandra.wordpress.com/2010/01/05/tamil-script-reform-its-vacuity-next-to-the-chinese-script/

குழந்தைகளும், வெளிநாட்டவர்களும் தமிழ்மொழியை எளிதாகக் கற்பதற்கு இம்மாற்றம் செய்ய விரும்புகிறார்களாம். இதைப் போல ஒரு அரைவேக்காட்டுத் தனமான ஒரு காரணத்தைச் சொல்ல முடியாது. கடந்த ஏழாண்டுகளாக அமெரிக்காவில் வார இறுதியில் நாங்கள் நடத்தும் தமிழ்ப் பள்ளியில் இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறேன். என்னைப் போலவே நிறையப் பேர் அமெரிக்காவின் பிற பகுதிகளில் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். யாரை வேண்டுமானாலும் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம்.

இங்குள்ள குழந்தைகள் 40 - 50 மணி நேரப் பயிற்சியில் பெரும்பாலான தமிழ் எழுத்துக்களை எளிதாகக் கற்றுக் கொள்கின்றனர். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பதாக எந்தக் குழந்தையும் எழுத்துக்களைக் குறையாகச் சொன்னதில்லை. பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் தமிழில் பேசாமலிருப்பதே முக்கியத் தடையாகும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க விரும்புகிறார்கள் குழந்தைசாமி போன்ற அறிஞர்கள்.

தமிழைப் பயிற்று மொழியாகப் படித்து வரும் வசதியற்ற நலிந்த பிரிவு மானவர்களையே இப்புரட்டுச் சீர்திருத்தம் பாதிக்கும். குழந்தைசாமிகளின் பேரன் பேத்திகளையல்ல.

'தமிழுக்கு நலம் செய்வதாகப் போலிப் பரப்புரைகளின் வழியாக வரலாற்றில் தங்கள் பெயர் பதியவேண்டும் என்பதில் சிலருக்கு இருக்கும் பேராசையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்."' என்ற சுப. நற்குணனின் கருத்தையே நானும் குறிப்பிட விரும்புகிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Blog Widget by LinkWithin