Friday, September 01, 2006

தொடர் 4 : குமரிநிலம் தமிழின் தாய்நிலம்

மாந்தன் முதன் முதலாகத் தோன்றிய இடம் இன்றைய இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கடற்பரப்பில் இருந்திருக்க வேண்டும் என்பது மாந்தவியல் (Antropology) ஆய்வாளர்களின் கருத்தாகும். இது உலகின் பெரிய மதங்களின் கருத்துகளோடும் ஒத்துப்போகின்றது. அதோடு, தமிழ் இலக்கியங்களிலும் இதற்கான சான்றுகள் உள்ளன.

இன்றைய இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கடற்பரப்பில் இலங்கைத் தீவுக்கும் கீழாகச் சென்றால் உலகின் பழம்பெரும் நாடு ஒன்று இருந்திருக்கிறது. இந்தியா, இலங்கையையும் சேர்ந்து தென் ஆப்பிரிக்கா, மியான்மார், மலேசியா, ஆஸ்திரேலியா, வடமேற்கு அமெரிக்கா போன்ற நிலப்பகுதிகள் ஒன்றாக ஒட்டிக்கிடந்த ஒரு மாபெரும் கண்டமாக அது இருந்திருக்கிறது. நிலத்தியல் (Geology) ஆய்வாளர்கள் இதனை "இலெமூரியா" என்று குறிக்கின்றனர். இம்மாபெரும் நிலப்பகுதியைத் தமிழ்மரபு "குமரிக்கண்டம்" என்று வழங்குகின்றது.

இலெமுரியா அல்லது குமரிக்கண்டமே உலக உயிர்களின் பிறப்பிடமும் மாந்தனின் பிறந்தகமும் ஆகும் என்பது அறிஞர்களின் முடிவு. பழங்கற்காலம் தொடங்கி பின்னர் புதுக் கற்கால நாகரிகமும் அதனையடுத்துச் செம்பு, வெண்கல, இரும்புக்கால நாகரிகங்களும் படிப்படியாக வளர்ந்து இன்றைய நூற்றாண்டின் நாகரிகங்கள் வரையில் எல்லாவற்றுக்கும் முதலும் மூலமுமாக அமைந்தது குமரிக்கண்ட நாகரிகமே ஆகும்.

பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் படிகளைக் கடந்து குமரிக்கண்டத்தில் தோன்றிய மனித இனம் உருவாக்கிய மொழிதான் பழந்தமிழ்மொழி. இந்தப் பழந்தமிழ்மொழியே பல்வேறு காலக்கட்டங்களில் பல வகையான மாற்றங்களையும் ஏற்றங்களையும், வீழ்ச்சிகளையும் வெற்றிகளையும் கண்டு இன்றளவும் நிலைத்திருக்கிறது.

குமரிக்கண்டத்தில் குமரிக்கோடு, பன்மலை முதலிய மலைகளும்; குமரி, ப•றுளி முதலிய ஆறுகளும் இருந்தன. மேலும், ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்காரை நாடு, ஏழ்குறும்பனை நாடு என 49 நாடுகளும் இருந்தன.

தமிழில் குறிக்கப்படும் முச்சங்க மரபு குமரிக்கண்டத்தில்தான் தொடங்கியது. ப•றுளி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பாண்டியர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை நிறுவினார்கள்.

சங்க காலம் தமிழ்மொழி வரலாற்றின் பொற்காலம்; தமிழ் மொழி தனிப்பெரும் தலைமையோடு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த காலம்; "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பொதுவியல் நோக்கோடு தமிழ் மிகவும் உயர்ந்து நின்ற காலம். இந்தப் பொற்காலம் பின்னர் கனவிலும் நினையாத கடற்கோள்களால் அழிந்துபட்டுப் போனது ஆற்றமுடியாத கண்ணீர் காலமுமாகிவிட்டது.

No comments:

Blog Widget by LinkWithin